ஆல்பிரெட் நோபல் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ஆல்பிரெட் நோபல்

ஆல்பிரெட் நோபலின் தந்தை இம்மானுவேல் புகழ் பெற்ற பொறியியலாளர். ஸ்டோக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யா நோக்கி நகர்ந்தார். அங்கே போர் நடக்கும் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரைப் பயன்படுத்தினார்.

ஆனாலும் போர் முடிந்தபின் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டார்; அவரின் பிள்ளையான ஆல்பிரெட் நோபலோ கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.

மகனின் ஆர்வத்தை அதிர்ந்த தந்தை ஏற்கனவே வேதி பொறியியல் படித்திருந்த மகனை பாரிஸில் புகழ் பெற்ற ஒரு வேதியியல் நிபுணரிடம் அனுப்பினார்; அங்கேதான் நைட்ரோ க்ளிசரினை பார்த்தார்; அது வெடிமருந்து பவுடரை மாதிரி பலமடங்கு ஆற்றல் மிகுந்து இருந்தது, எனினும் அது கொஞ்சம் அழுத்தம், வெப்பம் மாற்றங்களில் கூட வெடித்து விடும் தன்மை கொண்டிருந்தது. அதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் ஆய்வில் ஈடுபட்டார் மனிதர். இதில் தன் தம்பியையே ஒரு வெடிவிபத்தில் இழந்தார். அப்பொழுது “மரணத்தின் வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அதிர்ந்தார் அவர். ஆல்பிரெட் நோபல் ஸ்டாக்ஹோமில் ஆய்வு செய்ய அரசு தடை விதித்தது.

இறுதியில் அவர்கள் நாட்டில் கிடைக்கும் கேய்சல்கர் எனும் களிமண்ணைக் கலந்து டைனமைட்டை உருவாக்கினார். அது மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள், பாலங்கள் கட்டப் பயன்பட்டது. ஆனால் அதையே போரில் பயன்படுத்திப் பல உயிர்களைக் குடிக்க ஆரம்பித்தன ராணுவம், உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு அவர் நாற்பத்தி மூன்று வயதிலேயே நொந்து போய் முடங்கிப்போனார்.

ஆல்பிரெட் நோபல் உதவியாகப் பெர்த்தா என்கிற பெண் செயலராக வந்தது அவர் வாழ்வில் பெரிய மாற்றம். அவரின் பாவத்துக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் பெர்த்தா. உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள் என ஒரு நூலையும் எழுதினார். பின் நோபலை விட்டு பிரிந்து திருமணம் செய்துகொண்டு அவர் வெளியேறிவிட்டாலும் அவரின் தாக்கத்தில் நோபல் தனிமையில் தன்னால் ஏற்பட்ட அழிவிற்குப் பிராயசித்தம் தேட யோசித்ததன் விளைவு அவரின் உயிலில் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள அவரின் சொத்தில் இருந்து வரும் வட்டியில் வருடாவருடம் அமைதி அறிவியல் உலக முன்னேற்றம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு தருபவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும் என அவர் அறிவித்து விட்டு போனதன் விளைவாக உண்டானதே நோபல் பரிசு. இலக்கியம், இயற்பியல், வேதியியல்,மருத்துவம்,உலக அமைதி,பொருளாதாரம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருது இரண்டையும் பெற்றவர் பெர்னார்ட் ஷா. நோபல் பரிசு உருவாக்கப்பட்ட பொழுது பொருளாதாரத்துக்குப் பரிசு நோபலின் உயிலில் குறிக்கப்படவில்லை; 1968-ம் ஆண்டில் இருந்தே அப்பரிசு வழங்கப்படுகிறது.

ஹிட்லர் தன் காலத்தில் தன் நாட்டவர் மூவர் நோபல் பரிசை பெறுவதைத் தடுத்து இருக்கிறார் ;அவர் மறைந்த பின் அப்பரிசை அவர்கள் பெற்றுக்கொண்டாலும் பணம் கொடுக்கப்படாமல் போனது,ஒன்லி பதக்கம் எனக் கறாராகச் சொல்லிவிட்டது கமிட்டி.

நோபல் அமைதி பரிசு காந்திக்கு வழங்கப்பட்டதே இல்லை ; அவருக்கு 1948-ல் வழங்க நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் கொல்லப்பட்டதால் அப்பரிசு அவருக்கு மரியாதையைச் செலுத்தும் வகையில் அவ்வருடம் மட்டும் கொடுக்கப்படாமலே போனதாகச் சொல்லப்படுவதுண்டு. காந்திக்கு பரிசு கொடுக்கப்படாமல் போனதற்குப் பகிரங்க மனிப்பு கேட்டது நோபல் கமிட்டி.

நோபல் பரிசின் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் விருந்துக்கான பணத்தையும் முழுக்கப் பெற்று அதையும் சமுகச் சேவைகளுக்குச் செலவிட்டார் அன்னை தெரசா. இறந்தவர்களுக்குப் பெரும்பாலும் நோபல் பரிசுகள் வழங்கப்படுவதில்லை ; 2011-ல் ஒரு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஸ்டெய்ன்மென் அதற்கு மூன்று நாட்கள் முன்னமே மரணம் அடைந்து இருந்தார். இது தெரியாமலே பரிசை அறிவித்து விட்டனர். ஆனால், அப்பரிசை திரும்பப்பெறவில்லை கமிட்டி.

Post a Comment

Previous Post Next Post